“மோசடி முதலீட்டு வலைத்தளங்களை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரபலங்கள் பற்றிய பரபரப்பான தலைப்புச் செய்திகள் மற்றும் நன்கு அறியப்பட்ட செய்தி நிறுவனங்களின் போலி லோகோக்கள் அடங்கிய சமூக ஊடக பதிவுகள் பரவி வருவதாலும், பங்கு வர்த்தகம், கிரிப்டோகரன்சி மற்றும் பிற நிதி திட்டங்கள் மூலம் போலி முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதாலும் தமிழ்நாட்டின் சைபர் குற்றப் பிரிவு ஏற்கனவே ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரேயா கோஷல், டாக்டர் சுதா மூர்த்தி போன்ற பிரபல நபர்கள் சம்பந்தப்பட்ட போலி செய்திகளுடன் இதுபோன்ற சமூக ஊடக பதிவுகள் பெருகுவது, சமூக ஊடக பயனர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது.
என்றும், சைபர் குற்றப் பிரிவின் சைபர் ரோந்துக் குழு சமூக ஊடக தளங்களில் தீவிரமாக கண்காணித்துமோசடி இணைப்புகள் மற்றும் வலைத்தளங்களை அகற்றி வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மோசடி நடவடிக்கைகளுக்கு எக்ஸ் தளம் அதிகமாக பயன்படுவதைத் தடுக்க செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க எக்ஸ் தளத்திற்கு ஒரு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரேயா கோஷல் போன்ற பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்துவது உட்பட முதலீட்டு மோசடிகளின் பெருக்கம் பயனர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது.
சந்தேகத்திற்கிடமான இவ்வகையான பதிவுகளைக் கண்டறிந்து அகற்ற வலுவான சரிபார்ப்பு செயல்முறைகளைச் செயல்படுத்த எக்ஸ்-க்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குமாறு உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் ஒருங்கிணைப்பு மையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை, ஸ்ரேயா கோஷல் சில வர்த்தக தளங்களை ஊக்குவித்ததாகக் கூறப்படும் தவறான தகவல்களைக் கொண்ட 25 “X” பதிவுகளை அடையாளம் கண்டுள்ளது என்றும், மேலும் இவை அனைத்தும் சைபர் க்ரைம் போலீசாரால் நீக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக, இந்த தவறான செய்திகளுடன் தொடர்புடைய 38 வலைத்தளங்கள் மற்றும் வர்த்தக தளங்கள் அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று புகழ் பெற்ற பொது நபர்களான இந்திய குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர், ஈஷா நிறுவனர் சத்குரு போன்றவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு தளங்களை ஊக்குவிக்கும் ஒரு போக்கு ஃபேஸ்புக்கில் உருவாகியுள்ளது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய 18 பேஸ்புக் பதிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய 15 வலைத்தளங்களை சைபர் க்ரைம் பிரிவு அடையாளம் கண்டுள்ளதாகவும், இந்த பதிவுகள் மற்றும் போலி செய்தி வலைத்தளங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதேபோன்று மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-யை தொடர்பு கொள்ள வேண்டும் அல்லதுwww.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.