கோவையில் உதவி ஆணையர் இந்திரா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது !

கோவையில் தனியார் கோவிலை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் இந்திரா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரித்து வரும் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிரது.
இக்கோவிலில் வருவாய்ப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.இந்நிலையில், நிதி மேலாண்மை முறையாக இல்லை என்பதால் இந்த கோவிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என அதன் நிர்வாகிகளில் ஒருவரான சுரேஷ்குமார் என்பவர் இந்து சமய அறநிலையத் துறையில் மனு அளித்திருந்தார்.
மதுரை உயர் நீதிமன்றமும் இது தொடர்பாக 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சுரேஷ்குமார் மனு மீது நடவடிக்கை எடுத்து, கோவிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வருவதற்கு மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என உதவி ஆணையர் இந்திரா கேட்டுள்ளார்.
ஆனால், சுரேஷ்குமார் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து, இறுதியாக 1.5 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுக்க வேண்டும் என இந்திரா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நேற்று இரவு இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் அருகில் உள்ள பாரதியார் சாலையில், ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை சுரேஷ்குமாரிடம் இருந்து உதவி ஆணையர் இந்திரா வாங்கியுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் உதவி ஆணையர் இந்திராவை கைது செய்தனர். இந்து சமய அறநிலையத் துறையின் உயரதிகாரி நேரடியாக லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்தத் துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.