அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஸ்வாஷ் குமார் பதைபதைக்கும் உரை !

விமானம் புறப்பட்ட 30 நொடிகளில் பயங்கர சத்தம் கேட்டதாகவும், பின்னர் தரையில் விழுந்து நொறுங்கியதாகவும் விமான விபத்தில் உயிர்தப்பிய விஸ்வாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, நேற்று 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, ‘ஏர் இந்தியா’ போயிங் 787 – டிரீம் லைனர் விமானம், 30 வினாடிகளில் கீழே விழுந்து வெடித்தது.
600 முதல் 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானதில், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
அவர் காயங்களுடன் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஸ்வாஷ் குமார் விமானம் புறப்பட்ட 30 நொடிகளில் பயங்கர சத்தம் கேட்டதாகவும், பின்னர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாகவும் தெரிவித்தார்.
சீட் தனியாக வந்ததால் தம்மால் வெளியே வர முடிந்தது என்றும், சீட் உடைந்து தனியாக வந்ததால் ஒரு பக்க அவசர வழி சேதமடைந்த நிலையில், மறுபக்க அவசர வழி வழியாக வெளியேறினேன் என்றும் விஸ்வாஷ் குமார் கூறினார்