சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், கூட்ட நெருக்கடியால் மாணவ மாணவியர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம் என்றும், சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளதாகவும், ஆகவே, மாணவ மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வண்ணம், நெருக்கடி மிகுந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக தனிப் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, “பிள்ளைகளை அறிவுறுத்தி வளர்க்க வேண்டியதில் பெற்றோரின் கடமை உள்ளதாகவும், பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது என்றும் மாணவியர் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும், படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நடத்துனர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்பதில்லை. அது தண்டனைக்குரிய குற்றம் என்றும், காவல்துறையினர் வழக்கு பதிவு கூட செய்யலாம்.

ஆகவே மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts