சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை வடமாநில இளைஞர் ஒருவர் கைது !

சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்துவரும் 20 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 7:30 மணி அளவில் தனது கல்லூரி வளாகத்தில் உள்ள ஃபுட் கோர்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த மாணவி செல்லும் வழியில் வந்த ஒரு நபர் கையில் கட்டையை வைத்துக் கொண்டு மாணவியிடம் செல்ஃபோன் எண்ணை கேட்டு முடியை பிடித்து தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் ஐஐடி வளாகத்தில் இருந்த காவலாளிகளிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐஐடி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதுடன் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்தவர் ஐஐடி வளாகத்தில் உள்ள ஃபுட் கோர்ட் கடை ஒன்றில் வேலைபார்த்து வரும் வட மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த மகளிர் போலீசார், காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ரோஷன் குமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவருக்கு அண்மையில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிவையில், தற்போது சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு வடமாநில நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.