காவல்துறைக்கு களங்கம்: கந்துவட்டி கொடுமைக்குத் துணை நின்ற அதிகாரிகள் – ரூ.25 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வட்டி கேட்டுப் பெண்ணை மிரட்டிய சம்பவம்!

சென்னை:

வீடு கட்டுவதற்காகக் கடன் வாங்கிய பெண் ஒருவர், அதீத வட்டி கொடுமைக்கு ஆளாகி, காவல்துறையிடம் புகார் அளித்தும் நிவாரணம் கிடைக்காமல் தவித்து வரும் அதிர்ச்சி சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. கந்துவட்டி பிரிவு அதிகாரிகளே கடன் கொடுத்தவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பூவிருந்தவல்லி குமணஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், வீடு கட்டுவதற்காக முகலிவாக்கம் பகுதியில் வசிக்கும் பிரிசில்லா என்பவரிடம் ரூ.25 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார்.

இதற்கு அதீத வட்டியாக, மூன்று நாட்களுக்கு ஒருமுறை வட்டி மற்றும் வாராந்திர வட்டியாக 15 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.வெறும் ஆறு மாதங்களிலேயே, காயத்ரி ரூ.69 லட்சம் வட்டியாகப் பிரிசில்லாவின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தியுள்ளார். இது போதாதென்று, இன்னும் ரூ.1 கோடி வட்டி செலுத்த வேண்டும் எனக் கூறி, இல்லையெனில் வீட்டுக்குத் திருநங்கைகளை அனுப்பி கலாட்டா செய்வேன் என மிரட்டியுள்ளார் பிரிசில்லா.

இதற்குப் பயந்த காயத்ரி, சில நிலப் பத்திரங்களை அடமானமாக வழங்கியுள்ளார்.இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத காயத்ரி, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால், அப்புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பிரிசில்லா தரப்பில் காயத்ரி கடனைத் திருப்பித் தரவில்லையெனப் புகார் அளிக்கப்பட்டது.

அதனை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காவல்துறை, காயத்ரியின் வீட்டுக்கே சென்று சம்மன் ஒட்டியுள்ளது.கந்துவட்டி பிரிவு காவல் ஆய்வாளர் சகாய செல்வின், பிரிசில்லாவின் புகாரைச் சிவில் வழக்கு எனக் கூறி விசாரணையை முடித்துள்ளார். திடீரென அங்கு வந்த உதவி ஆணையர் ஸ்டீபன், ஆய்வாளரைப் பலர் முன்னிலையில் கடிந்துகொண்டு, பிரிசில்லாவுக்கு ஆதரவாகப் பேசியதோடு, காயத்ரியை பணம் தராவிட்டால் எப்.ஐ.ஆர். பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார்.

மேலும், கந்துவட்டி பிரிவுக் காவலர்கள் தொடர்ந்து இரு நாட்கள், சிவில் வழக்கை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் விசாரணை எனும் பெயரில் நீட்டித்துள்ளனர். கந்துவட்டி தொல்லையிலிருந்து விடுபடப் புகார் அளித்த பெண்ணை, அதே பிரிவின் மேலதிகாரி வட்டி செலுத்தும்படி மிரட்டிய அவலம் நிகழ்ந்துள்ளது.இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காயத்ரி, கந்துவட்டி கொடுமையிலிருந்து விடுபட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நிருபர்: ஜெ. துரை

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts