பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம்!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வெளிமாநிலங்களில் உள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் நீக்குவது, பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையலாம் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தடை விதிக்க மறுத்த நிலையில் வாக்காளர் திருத்த பணிக்கு ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் ஆகிய இரண்டையும் ஆவணமாக சேர்க்க வாக்காளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.