தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வடகர்நாடக – கோவா கடலோர பகுதிகளுக்கு அருகில் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிவரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், அதற்கடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவடைய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை முதல் 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்றும்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சிய்ஸ் முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் 25-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.