ஏப்ரல் 23 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் ஏப்ரல் 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் 21ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.