5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை முதல் 11ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுஅதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என்றும், நாளை முதல் 9ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.