இந்தியாவில் கடந்த 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து !

தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஏர் இந்தியாவின் AI – 143 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. டெல்லி – பாரிஸ் இடையேயான இந்த விமானம், பயணத்திற்கு முந்தைய ஆய்வின்போது சில சிக்கல்கள் கண்டறியப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் AI 159 ரத்து செய்யப்பட்டது. வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை சோதனைகள் காரணமாக விமானம் கிடைக்காததால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.
மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தரவுகளின்படி, ஜூன் 12 முதல் 17 வரையில் மொத்தம் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 66 விமானங்கள் போயிங் ரக விமானங்கள் என்றும் கூறப்படுகிறது