தென்னாப்பிரிக்கா வெள்ளப் பெருக்கில் சிக்கி 49 பலி !

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவில் நிலவி வரும் குளிர் காலநிலையால், அந்நாட்டின் பல பகுதிகளில் கடுமையான குளிர் காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டெகோலிக்னி கிராமத்தில், பள்ளிக்குச் சென்ற பள்ளி வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த பள்ளி வாகனத்தில் ஓட்டுநர், உதவியாளர் உட்பட 13 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் வெள்ளத்தில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 குழந்தைகள் மாயமானதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், டர்பன் மற்றும் குவாசுலு மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 400 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.