விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயை நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம், அனுப்பன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் ,மத்தியசேனையைச் சேர்ந்த லட்சுமி , விருதுநகர் வட்டம், ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி, சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம் ,சூலக்கரையை சேர்ந்த வைரமணி உள்ளிட்ட 8 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் எனவும், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.