10 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில்களில் 30 கோடிப் போ் பயணம்!

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடிப் போ் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மெட்ரோ ரயிலில், பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மெட்ரோ ரயில் சேவை, விமான நிலையம் – விம்கோ நகா், சென்ட்ரல் – பரங்கிமலை இடையே 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வருகிறது. மேலும், 3 வழித்தடங்களில் 118 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, ஜூன் 29-ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை சென்னையில் தொடங்கிய நாள் முதல் இதுவரை சுமார் 30 கோடிப் போ் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை மாதந்தோறும் 70 லட்சம், 80 லட்சம் என அதிகரித்து வரும் நிலையில், விரைவில் 1 கோடியை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் மெட்ரோ ரயில்வே நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.