புதுக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வுப் பணியில் 1982 தொல் பொருட்கள் கண்டெடுப்பு !

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற 2ம் கட்ட அகழாய்வுப் பணியில் 1982 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2024 மே மாதம் தொடங்கியது. மொத்தம் 17 குழிகள் அமைத்து, நடைபெற்று வந்த அகழாய்வு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இங்கு நடைபெற்ற அகழாய்வு பணிகள் குறித்து தொல்லியல் துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், இங்கு முதல் கட்ட அகழாய்வு பணி, கடந்த 2023ல் நடைபெற்றது எனவும் 22 குழிகள் அமைக்கப்பட்டு, 155 நாட்கள் நடைபெற்ற அகழாய்வில், எலும்பு முனைக்கருவி, தங்கத் தோடு, சூதுபவள மணிகள், வட்டச்சில்லு உள்ளிட்ட 533 தொல் பொருட்கள் கிடைத்தன எனவும் செங்கல் கட்டுமானங்களும், வாய்க்கால்களை போன்ற நீர்வழி தடங்களும் வெளிப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளன.

இதேபோல், 2ம் கட்ட அகழாய்வு கடந்த 2024 மே மாதம் தொடங்கப்பட்டது எனவும் மொத்தம் 17 குழிகள் அமைக்கப்பட்டன எனவும் அதில், இரும்பு மற்றும் செம்பு ஆணிகள், மை தீட்டும் குச்சி, தங்க அணிகலன்கள், மணிகள் செய்யும் தொழிற்கூடம் இருந்ததற்கான அடையாளங்களாக அகேட் கல்லின் மூலப் பொருட்கள், மணிகளைத் தேய்த்து உருவாக்கும் தேய்ப்புக் கல் போன்றவை கிடைத்தன எனவும் எரிந்த நிலையிலான நெல்மணிகள், தாவரத்தின் வேர் போன்ற பகுதி, தமிழ்ப் பிராமி எழுத்துகள் மற்றும் கீறல் குறிகளைக் கொண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றன எனவும் 203 நாட்கள் நடைபெற்ற அகழாய்வில் மொத்தம் 1982 தொல் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts